டெல்லியில் 57வது தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கூட்டத்தில் பேச போதிய கால அவகாசம் வழங்கப்படாததால் தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தார். அவரைத் தொடர்ந்து குஜராத் முதல்வர் நரேந்திர மோதியும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த மோதி: மத்திய அரசின் கருத்தை மட்டும் கேட்பதற்கு ஒரு கூட்டம் அவசியம் இல்லை. மாநில முதல்வர்களுக்கு அவர்களது மாநிலத்தின் பிரச்னைகளை எடுத்துரைக்க போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். ஆனால் அவ்வாறு வழங்கப்படவில்லை. முதலமைச்சர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த நேரம் ஒதுக்கப்படவில்லை என்றார்.
ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு : கூட்டத்தில் முதல்வர்கள் தங்கள் மாநில பிரச்னைகள் குறித்து பேச வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டதால், கூட்டத்தில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர்: எந்த ஒரு மாநிலத்தின் பிரச்சனையையும் 10 நிமிடங்களில் எடுத்துரைக்க முடியாது. 10 நிமிடம் பேசியதும், மணியை அடித்து பேச்சை நிறுத்துமாறு தெரிவித்தனர். மாநிலத்தின் பிரச்னையை எடுத்துரைக்க போதிய கால அவகாசம் வழங்க முடியாது என்றால் மத்திய அரசு மாநில முதல்வர்களை ஏன் அழைக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார். மேலும் மாநில முதல்வர்களை மத்திய அரசு அவமானப்படுத்தி விட்டதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக கூட்டத்தை தொடங்கிய வைத்து உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங் : உள்நாட்டுப் பிரச்னைகளால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தி, 8% வளர்ச்சியை அடைவதே இலக்கு என தெரிவித்தார். உலகப் பொருளாதார நிலையும் கவலை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
-பசுமை நாயகன்