வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு



டெல்லி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேர் மீது விரைவு நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இதனையடுத்து இவர்கள் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் முறைப்படி தொடங்கும். குற்றம் சாட்டப்பட்டுள்ள 5 பேர் மீதும் கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
    டெல்லி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 6-வது நபர் மைனர் என்று சிறார் குற்ற விசாரணை அமைப்பு அறிவித்துவிட்ட நிலையில், இவர் மீதான விசாரணை சிறார் நீதிமன்றத்தில் நடைபெறும்.
    இதற்கிடையே சிறார் குற்ற விசாரணை அமைப்பின் அறிவிப்புக்கு டெல்லி மாணவியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிறார் குற்ற விசாரணை அமைப்பின் முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்வது தொடர்பாக சட்ட வல்லுனர்களின் உதவியை நாடியிருப்பதாக மாணவியின் தந்தை கூறியிருக்கிறார். இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கவும் மாணவியின் தந்தை நேரம் கேட்டுள்ளார்.
    டெல்லி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு பிறகு நாடு முழுவதும் நடந்த போராட்டங்களை கருத்தில் கொண்டு 6-வது நபருக்கு மரண தண்டனை வழங்க மத்திய மாநில அரசுகள் முன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாணவியின் சகோதரரும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
                                                                        -ஹாட் ஸ்பாட் நரேஷ்