2 ஜி ஸ்பெக்ட்ரம் உரிமைகளுக்கான ஏலம் தொடக்கம்

            2 ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களுக்கான ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது.  உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த ஏலம் டெல்லியில் இன்று காலை 9 மணிக்குத் தொடங்கியது.
இந்த ஏலத்தின் மூலம் மத்திய அரசுக்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏலத்தில், ஏர்டெல், வோடாபோன், டெலிவிங்ஸ், வீடியோகான் மற்றும் ஐடியா செல்லூலார் ஆகிய நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. இந்த ஏலம் இன்றிரவு 7.30 மணி வரை நடைபெறும் என்று மத்திய தொலை தொடர்புத் துறை செயலாளர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், நிறுவனங்கள் அவகாசம் கேட்டால் கொடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மத்திய தொலை தொடர்பு அமைச்சராக ஆ. ராசா பதவி வகித்த போது, 2 ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ஏலம் விடாமல், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டது.
இதனால், நாட்டுக்கு 1 கோடியே 76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி குற்றம் சாட்டினார். இது தொடர்பாக, ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து, ராசா ஒதுக்கீடு செய்த 122 உரிமங்களையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
இதில், யுனிநாரின் 22 உரிமங்கள், லூப் டெலிகாமின் 21 உரிமங்கள், வீடியோ கானின் 21 உரிமங்கள் ஆகியவை அடங்கும்.
-பசுமை நாயகன்