தண்ணீர் வந்தாலும் பலனளிக்காது : விவசாயிகள் கவலை

        காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் நேற்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும், இந்த உத்தரவு ஏமாற்றம் அளிப்பதாக கூறுகின்றனர் தமிழக விவசாயிகள்.

         காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக தமிழக - கர்நாடக அரசுகள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வரும் ஞாயிற்று கிழமை வரை தினம்தோறும் வினாடிக்கு 10ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர். இரு மாநில தண்ணீர் தேவை குறித்து, திங்கட்கிழமை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் காவிரி கண்காணிப்புக் குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக தமிழக விவசாயிகள் மற்றும் காவிரி உரிமை மீட்பு குழுவினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் டெல்டா மாவட்டங்களில் வாடி வரும் சம்பா பயிர்களைக் காக்கும் வகையில், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கொடுக்குமாறு, கர்நாடகாவுக்கு, கண்காணிப்பு குழு உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரி வழக்கில் நீதிபதிகள் கேள்வி : 
         காவிரி நீர்ப் பங்கீடு வழக்கு விசாரணைக்கு வந்த போது நடுவர் மன்ற தீர்ப்பு தொடர்பாக மத்திய அரசிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சில கேள்விகளை கேட்டனர். உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட தமிழக அரசின் வழக்கறிஞர் வைத்தியநாதன், 2007-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு இதுவரை அரசிதழில் வெளியிடப்படவில்லை என கூறினார். கர்நாடக வழக்கறிஞரும், அரசிதழில் இறுதி தீர்ப்பு வெளியிடப்படுவதை வரவேற்பதாக தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதிகள், நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் இதுவரை வெளியிடாதது ஏன் என மத்திய அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மத்திய அரசின் வழக்கறிஞர் ஹரின் ராவல், காவிரிப் பிரச்சனையில் தொடர்புடைய மாநிலங்கள், தீர்ப்பு தொடர்பாக மேல்முறையீடு செய்திருப்பதால் அரசிதழில் வெளியிடவில்லை என கூறினார். ஆனால், நடுவர் மன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டியது அரசின் கடமை என கூறிய நீதிபதிகள், நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதை காரணமாக கூறுவது அர்த்தமற்றது என கண்டனம் தெரிவித்தனர். மேலும் காவிரி நீர் சம்பந்தப்பட்ட மாநிலங்கள், தீர்ப்புக்கு தடை கோராத நிலையில் நடுவர் மன்ற தீர்ப்பை பின்பற்றாததால் நீதிமன்ற நேரம் வீண்டிக்கப்படுவதாக நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை பின்பற்றும் வகையில் அதனை அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
காவிரி கண்காணிப்பு அறிக்கை தாக்கல் செய்து, அதன் அடிப்படையில் தமிழகத்திற்கு தண்ணீரை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும் இனி, எந்த பலனும் இருக்காது என டெல்டா மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆயிரக்கணக்கான ஏக்கரில் பட்டுப்போன பயிர்களைக் காப்பதற்குப் பதில், மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பல விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
காவிரி நதி நீருக்காக உச்சநீதிமன்றம், நதிநீர் ஆணையம், கண்காணிப்புகுழு என தமிழக அரசின் முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மழை பற்றாக்குறையை காரணம் காட்டும் கர்நாடகா, தண்ணீரை தர மறுத்து வருகிறது. இந்த பிரச்னை இந்த ஆண்டு எந்தெந்த விதங்களில் கடந்து வந்தது என்பதை இப்போது பார்க்கலாம்.
காவிரி பிரச்னை கடந்த பாதை : 
     காவிரியில், கர்நாடகம் தண்ணீர் திறந்து விடாதததால், இந்த ஆண்டு திட்டமிட்டபடி, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட இயலாத நிலை ஏற்பட்டது. தென்மேற்கு பருவமழை துவங்கியதும், காவரியில் கர்நாடகா தண்ணீர் திறந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி வரை தண்ணீர் திறக்க மறுத்ததால், வேறுவழியின்றி சம்பா பயிரிடுவதற்காக, உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு அணுகியது. நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நதி நீர் ஆணையத்தின் கூட்டம் நடந்தது.
காவிரி நீர் திறக்க மறுக்கும் கர்நாடகம் செப்டம்பர் மாதம், பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில், செப்டம்பர் 21ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை தமிழகத்திற்கு தினமும் 9 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்தக் கூட்டத்தில் இருந்து, கர்நாடகா முதலமைச்சர் வெளிநடப்பு செய்தார்.இதையடுத்து பிரதமரின் உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி, நதிநீர் ஆணையத்தில் கர்நாடகா மனு செய்தது. ( NEXT ) உச்சநீதிமன்ற கண்டிப்பை அடுத்து, காவிரியில் தண்ணீர் திறந்து விட தொடங்கியது கர்நாடகம்.எனினும் இதற்கு தடை விதிக்க கோரி, உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தது. ஆனால், தினமும் 9,000 கன அடி தண்ணீரை தொடர்ந்து அளிக்க வேண்டும் என்றும், இந்த விஷயத்தில் காவிரி நதிநீர் ஆணையத்தின் தலைவரான பிரதமர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றது உச்சநீதிமன்றம்.
15 ஆண்டுக்கு பின் சந்திப்பு : டெல்லியை முற்றுகையிட்ட கர்நாடக பாரதீய ஜனதா, காங்கிரஸ் கட்சியினர், பிரதமரை சந்தித்து தண்ணீர் திறக்க பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய கோரினர். ஆனால் அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அடுத்த சில மணிநேரத்தில் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை கர்நாடகம் நிறுத்தியது. இந்நிலையில், தமிழகத்துக்கு அக்டோபர் 16 முதல் 31ம் தேதி வரை, 8.85 டி.எம்.சி., தண்ணீரை திறந்துவிடும்படி, காவிரி கண்காணிப்புக் குழு உத்தரவிட்டது. வறட்சி கால தண்ணீர் பங்கீடு திட்டப்படி, பற்றாக்குறை அளவான 48 டி.எம்.சி., தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனுவை தாக்கல் செய்தது. இம்மாத மத்தியில், காவிரி கண்காணிப்புக்குழு, தமிழகத்துக்கு நவம்பர் 16 முதல் 30ம் தேதி வரை, மேலும் 4.81 டி.எம்.சி., தண்ணீரை திறந்துவிடும்படி, உத்தரவிட்டது. ஆனால் இதுவரை தண்ணீர் வராத நிலையில், இந்த வழக்கு விசாரணையின்போது, கடந்த திங்களன்று, இருமாநில முதலமைச்சர்களும் சந்தித்து பேசி தீர்வு காண அறிவுறுத்தியது உச்சநீதிமன்றம்.. இதையடுத்து பெங்களுருவில் இரு மாநில முதல்வர்களுக்கு இடையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து மீண்டும் உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு அணுகியது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி அளவு நீரை நான்கு நாட்களுக்கு காவிரியில் திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
-பசுமை நாயகன்