வர்த்தகப் பொருளாகும் தண்ணீர்: மத்திய அரசு முடிவு


     தண்ணீரை வர்த்தகப் பொருளாகக் கருத வேண்டும் என மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள நீர்க் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தண்ணீர் விநியோகத்தை தனியார்மயமாக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
உலகின் மக்கள்தொகையில் 17 சதவீதம் பேர் இந்தியாவில் வசித்தாலும் உலகின் புதுப்பிக்கத்தக்க தண்ணீரில் 4 சதவீதம் மட்டுமே இங்கே இருக்கிறது. மக்கள் தொகை அதிகரிப்பதாலும், வளர்ச்சியின் காரணமாக தேவை அதிகரிப்பதாலும் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்தபடி இருக்கிறது.
இந்த நிலையில், இருக்கும் தண்ணீரை முறையாகப் பயன்படுத்துவதற்கான நீர்க்கொள்கையை மத்திய அரசு வகுத்துள்ளது. மிகக் குறைவாகவே கிடைக்கும் தண்ணீரை முறையாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தும் இந்த நீர்க்கொள்கை, தண்ணீரை சமூக சொத்து என்று குறிப்பிடுகிறது. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில முக்கியக் கருத்துகள் பின்வருமாறு:-
தண்ணீரை வர்த்தகப் பொருளாகக் கருதலாம். தண்ணீர் குறித்த சட்டமியற்றும் உரிமை மாநிலங்களுக்கு இருந்தாலும் தேசிய அளவிலான பொதுக் கொள்கை உருவாக்கப்படும். தண்ணீருக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தண்ணீரின் விலையை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பணிகளுக்காக ஒவ்வொரு மாநிலத்திலும் தண்ணீர் ஒழுங்கு முறை ஆணையங்களை உருவாக்க வேண்டும். பயன்பாட்டின் அடிப்படையில் தண்ணீரின் விலை நிர்ணயிக்கப்படும்.
மின்சாரத்திற்குக் குறைந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், தண்ணீரும் மின்சாரமும் வீணாகிறது. விவசாயத்திற்கு நிலத்தடி நீரை மானிய விலையில் வழங்க வேண்டும். தண்ணீரை விநியோகிக்கும் உரிமையை தனியாருக்கு வழங்கலாம் போன்ற பல சர்ச்சைக்குரிய கருத்துகளை இந்த சட்ட முன்வடிவு முன்வைக்கிறது.
தண்ணீரை வர்த்தகப் பொருளாக ஆக்கினால், எல்லோராலும் அதனை வாங்க முடியுமா என்று கேள்வியெழுப்புகிறார்கள் நிபுணர்கள்.தண்ணீருக்கு விலை நிர்ணயித்து, அதனை ஒழுங்குபடுத்த ஆணையங்களை அமைத்தாலும், அவை ஒழுங்காக செயல்படுமா என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.
சர்ச்சைக்குரிய அம்சங்கள் இதில் இடம்பெற்றிருந்தாலும், ஆறுகள், ஆற்றுப் படுகைகள் ஆகியவற்றைப் பாதுகாப்பதை அறிவியல் முறையில் மேற்கொள்ள வேண்டும்.
நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அனுமதிக்கக்கூடாது, திட்டமிடுதலின்போது சதுப்பு நில பாதுகாப்பு, வெள்ளம் ஏற்படும் பகுதிகள் ஆகியவற்றை மனதில்கொண்டு முடிவெடுக்க வேண்டும், ஆழ்துளை கிணறுகள் அமைப்பதை முறைப்படுத்த வேண்டும் எனப்‌ பல வரவேற்கத்தக்க அம்சங்கள் இந்த புதிய கொள்கையில் இடம்பெற்றிருக்கின்றன.
-பசுமை நாயகன்