நிதி மசோதாவில் 7-வது பிரிவை நீக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்

 
     நாடாளுமன்ற மக்களவையில் தாக்கலான நிதி மசோதாவில் இடம்பெற்றுள்ள 7ஆவது பிரிவை நீக்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
        இது தொடர்பாக அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில், குறிப்பிடப்பட்ட நிதி மசோதா, நாடாளுமன்ற ஒப்புதலை பெறுவதற்கு முன்பாக, மாநில அரசுகளின் நிதிச் சுதந்திரத்தில் குறுக்கிடும் 7ஆவது பிரிவை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
        வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 40-ன் கீழ், மாநில அரசு உரிமக் கட்டணம், காப்புரிமைத் தொகை என்ற பல பெயர்களில், மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மீது கட்டணங்களை விதிக்க அனுமதிக்கப்படுகிறது. இந்த கட்டணங்கள், சம்மந்தப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின் செலவாக கணக்கில் கொள்ளப்படுவதுடன் மாநில அரசுக்கு, வரி சாராத வருவாயாகவும் மாறுகிறது.
     ஆனால், நடப்பு பட்ஜெட்டில் அறிமுகமாகியுள்ள புதிய விதியின்கீழ், இக்கட்டணங்கள் வருமான வரிச் சலுகை பெற தகுதியற்றவை என மாற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் மாநில அரசுகளுக்கான பல்வேறு விதமான நிதி ஆதாரங்கள் முடக்கப்படும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன.
      எனவே இவ்வித நடைமுறைகளைக் கைவிட்டு பெரிய அளவில் வரி ஏய்ப்பு செய்யும், தனியார் அமைப்புகளையும், நபர்களையும், வரி வலைக்குள் கொண்டுவரும் நடவடிக்கையை தொடங்குவதே சரியான அணுகுமுறையாக இருக்கும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.