இலங்கையில் போர் முடிவடைந்த பின்னர், முதன்முறையாக நூற்றுக்கணக்கானோர் போராட்டம்



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


        
  தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகள் இலங்கை அரசுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.
  இந்நிலையில், இலங்கையில் காணாமல் போனவர்களின் உறவினர்களும் போராட்டத்திற்காக திரண்டு வந்தது அந்நாட்டு அரசை திகைக்கச் செய்திருக்கிறது.
    இலங்கை போரில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், காணாமல் போன ஆயிரக்கணக்கான மக்களின் நிலை என்ன என்பது இன்று வரை தெரியவில்லை. அவர்களில் பலர் ராணுவத்தின் ரகசிய சித்ரவதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்நிலையில், அவ்வாறு காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தரக்கோரி அவர்களது உறவினர்கள் திடீரென போராட்டத்தில் குதித்தனர்.
    ஆர்ப்பாட்டத்தில் மொத்தம் ஆயிரம் பேர் பங்கேற்றனர். மகன் மற்றும் மகளை இழந்த தாயார், கணவரை இழந்த பெண்கள், தந்தையை இழந்த குழந்தைகள் என ஏராளமானோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர். கொழும்பு மக்களிடம் தங்கள் சோகத்தை பகிர்ந்து கொள்வதற்காக அவர்கள் புறப்பட இருந்தனர்.
   கொழும்பு நகரில் அவர்கள் போராட்டம் நடத்த புறப்பட்டபோது ராணுவம் அவர்களை தடுத்து நிறுத்தியது. இதனால், அவர்கள் அனைவரும் வவுனியாவில் உள்ள மைதானம் ஒன்றில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்கத் தூதரகம் கண்டனம்: இலங்கையில் போர் முடிவடைந்த பின்னர், முதன்முறையாக நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்துவதற்காக தலைநகர் நோக்கிப் புறப்பட்டது இலங்கை அரசை திகைக்கச் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, அவர்கள் வவுனியாவில் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கத் தூதரகம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.
தீர்மானம் குறித்து பிரதமர் விளக்கம்: ஜெனிவாவில் ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டம் நடைபெறும் நிலையில், இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தில் இந்தியாவின் நிலைப்பாடு பல்வேறு நாடுகளால் உற்று நோக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்த தீர்மான விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.