ஜாமினில் வெளிவந்த யுவராஜ் மீண்டும் கைது



கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்த தீரன் சின்னமலை பேரவை என்ற ஜாதி அமைப்பின் தலைவரான யுவராஜை மீண்டும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று மீண்டும் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ. இவர் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக, திருச்செங்கோடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பலரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த பெண் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கும், கோகுல்ராஜ் கொலை வழக்கும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த யுவராஜ், கடந்த ஆண்டு அக்டோபரில் நாமக்கல் சிபிசிஐடி போலீசில் சரண் அடைந்தார். இதனையடுத்து ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் யுவராஜ் மனுத்தாக்கல் செய்ததன்பேரில், நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் ஜாமினில் வெளிவந்த யுவராஜ் மீண்டும் சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் யுவராஜை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். யுவராஜை நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Source: tamil.oneindia.com