தீபாவளிக்கு சிறப்புப் பேருந்துகள்- அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு 2 ஆயிரத்து 828 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 9-ந் தேதி முதல் வரும் 12-ந் தேதி வரை சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதே போல், சென்னையைத் தவிர்த்து மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 31 பேருந்துகள் இயக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
தீபாவளி பண்டிகை முடிந்த பின்பு, பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்பும் வண்ணம் இதே அளவில் 13 முதல் 16-ந் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சிறப்புப் பேருந்துகளுக்கான முன் பதிவுக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 16 சிறப்பு முன் பதிவு மையங்கள் செயல்படும் என்று அவர் கூறியுள்ளார். இணைய தளம் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் நேரிலோ அல்லது 24794709 என்ற தொலைபேசியிலோ புகார் தெரிவிக்காலம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.