டெல்லி அரசு ஒப்படைத்துள்ள கூடுதல் மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்கக்
கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் 7ம் தேதி
நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மின்சாரத்தை தமிழகத்துக்கு
வழங்கக் கோரி இரண்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தது. மனுவில், டெல்லி
அரசு நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை, ஆயிரத்து 721 மெகாவாட் கூடுதல்
மின்சாரத்தை மத்திய தொகுப்புக்கு அளிக்க உள்ளதால், அந்த மின்சாரத்தை,
மின் பற்றாக்குறை மாநிலமான தமிழகத்துக்கு வழங்கும்படி மத்திய அரசுக்கு
உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தது.
இதுதவிர, மத்திய மின் தொகுப்பில் இருந்து தெற்கு மின்
தொகுப்பில்இணைப்பதற்கு போதிய மின் வழித்தடங்கள் இல்லாததால், அதற்கான
வழித்தடங்களை அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தி இருந்தது.
மேலும், தமிழக அரசு தாக்கல் செய்த இன்னொரு மனுவில், டெல்லி வழங்கும்
கூடுதல் மின்சாரத்தை வேறு எந்த மாநிலத்துக்கும் வழங்காமல், தமிழகத்துக்கு
மட்டும் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
தமிழக அரசின் மனுவை, அவசர நிலையை கருத்தில் கொண்டு உடனே விசாரிக்க
வேண்டும் என, தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல்
ரோத்தகி உச்சநீதிமன்றத்தில் இன்று வலியுறுத்தினார். இந்த வழக்கு மீதான
விசாரணை வரும் 7ம் தேதி நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் இன்று
தெரிவித்தது.
-சத்திஷ் K.K.K.nagar