சென்னையில் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் 12 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
அமெரிக்காவின் பிபிஜி நிறுவனமும், இந்திய நிறுவனமான ஹர்ஷாவும் இணைந்து
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஃப்லோட் கிளாஸ் மற்றும் ஃபைபர் கிளாஸ்
தயாரிக்கும் ஆலையை அமைக்கின்றன. ரூ. 4100 கோடி முதலீட்டில் அமையும் இந்த
ஆலையில் ஆயிரத்து 850 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
பிஜிஆர் எனர்ஜி நிறுவனமும் புகழ்பெற்ற ஹிட்டாச்சி நிறுவனமும் இணைந்து
காஞ்சிபுரம் மாவட்டம் நெற்குணப்பட்டில் ஜெனரேட்டர், டர்பைன், பாய்லர்
தயாரிப்பு ஆலையை அமைக்கின்றன. 2,400 பேருக்கு வேலைவாய்ப்பு தர வாய்ப்புள்ள
இந்த ஆலை ரூ.2,325 கோடி முதலீட்டில் அமைகிறது.
தமிழகத்தில் பிரபலமான முருகப்பா குழும நிறுவனம் சைக்கிள், ஸ்கூட்டர்
உதிரிபாகங்கள் இரும்பு குழாய், தொழிற்சாலைகளுக்கான உபபொருட்கள்
உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும் ஆலையை திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம்
மாவட்டங்களில் அமைக்கிறது. ரூ. 500 கோடி முதலீட்டிலான இவ்வாலைகள் 1130
பேருக்கு வேலை தரும்.
பன்னாட்டு நிறுவனமான ஆம்வே, வீட்டு உபயோக பொருள்களை உற்பத்தி செய்யும் ஆலையை திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அமைக்கிறது.
இந்தோ ராமா குழுமம் பெட்ரோ கெமிக்கல் மற்றும் சிந்தடிக் ஃபைபர்
தயாரிப்பு ஆலைகளை ரூ. 4,500 கோடி முதலீட்டில் அமைக்கிறது. சென்னை,
எண்ணூர், கோவையில் அமைய உள்ள இவ்வாலைகள் 500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு
தரும்.
ஏடிடி ஜவுளி தொழிற்பூங்கா, கோவை அருகே அன்னூரில் நிறுவப்பட உள்ளது.
ரூ. 3,100 கோடி முதலீட்டில் உருவாகும் இந்த பூங்கா, இன்னும் 7 ஆண்டுகளில்
25 ஆயிரம் பேருக்கு வேலை தரும்.
டிவிஎஸ் நிறுவனம் சென்னை, ஒரகடம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஹோசூர் ஆகிய
இடங்களில் உள்ள தனது ஆலைகளில் ரூ.700 கோடி செலவில் விரிவாக்க பணிகளை
மேற்கொள்கிறது. இதனால் புதிதாக 1300 வேலைவாய்ப்புகள் உருவாகும் .
டென்மார்க் நாட்டின் டான்ஃபோஸ் நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம்
ஒரகடத்தில் உள்ள தனது ஆலையை ரூ. 500 கோடி செலவில் விரிவாக்குகிறது.
தொழிற்சாலை இயந்திரங்களைத் தயாரித்துவரும் இந்த ஆலையில் 1200 பேர்
கூடுதலாக வேலைவாய்ப்பு பெறுவர்.
நோக்கியா நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள
ஆலையை ரூ.250 கோடி செலவில் விரிவாக்குகிறது. இதனால் 500 பேர் வேலை
பெறுவர்.
ஹுண்டாய் கார் நிறுவனத்தி்ன் காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்
கோட்டை ஆலை ரூ.4000 கோடி செலவில் விஸ்தரிக்கப்படுகிறது. இதனால் புதிதாக
500 வேலைவாய்ப்புகள் உருவாகும்.
அமெரிக்காவின் சான்மினா நிறுவனம், ஒரகடத்தில் தனது ஆலையை ரூ.250 கோடி
செலவில் விரிவாக்குகிறது. எலக்ட்ரானிக் ஹார்டுவேர் பொருட்களை தயாரிக்கும்
இந்நிறுவனத்தில் 1500 பேர் புதிதாக வேலைவாய்ப்பு பெறுவர். இந்த புதிய
அறிவிப்புகளால் அதிக பலன் அடையப் போவது. காஞ்சிபுரம் மாவட்டம்தான். இங்கு
புதிய ஆலைகள், விரிவாக்க பணிகள் என மொத்தமாக 9 முதலீடுகள் மேற்கொள்ளப்பட
உள்ளன.