நிலம் கையகப்படுத்துவதில் உள்ள பிரச்சனை காரணமாகவே ஏராளமான ரயில்வே
திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் உள்ளதாக ரயில்வே இணை அமைச்சர் ஆதிர் ரஞ்சன்
செளத்ரி தெரிவித்தார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரிக்கு செல்லும் வழியில்
சென்னை வந்த அவர், செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். ரயில்வே
திட்டங்களுக்கு நிலங்கள் கையகப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக உள்ளதாகவும்
அவர் குறிப்பிட்டார்.
2 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்புள்ள பல்வேறு திட்டங்கள் இதனால்
பாதிக்கப்பட்டுள்ளதாக ரஞ்சன் செளத்ரி கூறினார். எனினும் இப்பிரச்சனைகளை
சரிசெய்து திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ரயில்வே சேவையின் தரத்தை உயர்த்துவது, கட்டமைப்புகளை மேம்படுத்துவது
ஆகியவற்றில் ரயில்வேதுறை முக்கிய கவனம் செலுத்தி வருவதாகவும் ஆதிர் ரஞ்சன்
செளத்ரி தெரிவித்தார்.
-விஸ்வநாதன்