நாட்டின் மொத்த சமையல் எரிவாயு இணைப்புகளில் சுமார் 10 சதவீதம் போலி
இணைப்புகள் உள்ளதாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தரப்பு தகவல்கள்
தெரிவிக்கின்றன.
மானிய விலை சிலிண்டர்கள் எண்ணிக்கையை ஆண்டுக்கு 6 ஆக மத்திய அரசு
குறைத்துள்ள நிலையில், போலி எரிவாயு இணைப்புகள் அதிகரித்து வருவதாக
மும்பையில் எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் இன்று தெரிவித்தன. எரிவாயு
சிலிண்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களிடம், வாடிக்கையாளர்
பற்றிய முழு விவரங்களை துல்லியமாக கையாளும் வசதி இல்லாததே இதற்கு காரணம்
என்று கூறப்படுகிறது.
மானிய விலை சிலிண்டர்களை கூடுதலாகப் பெற, ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட
இணைப்புகளை பெற முயற்சிப்பதாகவும் எண்ணெய் நிறுவன உயரதிகாரி ஒருவர்
தெரிவித்தார். இதைத் தடுக்கவே கே.ஒய்.சி. விதிமுறைகளை கடுமையாக்க
வேண்டியிருப்பதாகவும், அதனால், புதிய இணைப்பு பெற விண்ணப்பிக்கும்போது
தாமதம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை என்றும் அந்த அதிகாரி கூறினார்.
பாரத் பெட்ரோலிய நிறுவனத்திடம் மட்டும் 36 லட்சம் போலி இணைப்புகள்
இருப்பதாகவும், ஒட்டுமொத்தமாக நாட்டின் எரிவாயு இணைப்புகளில் 10 சதவீதம்
போலி என்றும் எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கே.ஒய்.சி.
விதிமுறையின்கீழ் இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம்
நிறுவனங்கள் இதுவரை 2 லட்சம் போலி இணைப்புகளை தடுத்துள்ளதாகவும் தகவல்கள்
தெரிவிக்கின்றன.