ஊழலுக்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்க ஹசாரே குழு,
டெல்லியில் இன்று கூடுகிறது. சமூக ஆர்வலர் அர்விந்த் கெஜ்ரிவால், அரசியல்
கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த பின்னர் முதன் முறையாக இக்குழு கூடுகிறது.
இதில் அன்னா ஹசாரே, கிரண் பேடி, மேத்தா பட்கர் உள்ளிட்டோர் கலந்து
கொள்கின்றனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக, முன்னாள் ராணுவ தளபதி
வி.கே.சிங் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. ஊழலை ஒழிக்க நாடு தழுவிய
இயக்கத்தை தொடங்குவது குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது
குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
ஊழலை ஒழிக்க மாவட்ட வாரியாக குழுக்களை அமைக்க
திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இவை தவிர, சுமார் 17 பேர்
அடங்கிய மத்திய ஒருங்கிணைப்புக் குழுவை அமைப்பது குறித்தும் இந்த
கூட்டத்தில் முடிவெடுக்கப்படுகிறது. புதிய குழுவில் அன்னா ஹசாரே, கிரண்
பேடி, மேத்தா பட்கர், நீதிபதி சந்தோஷ் ஹெக்டே ஆகியோர் உறுப்பினர்களாக
இருப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.