பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர் பரிதி என்கிற நடராஜா
மதீந்திரன் அடையாளம் தெரியாத நபர்களால் பாரிசில்
சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 1983ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு
இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்ட போது, அதில் கலந்து கொண்டவர் பரிதி.
1990 ம் ஆண்டு வரை புலிகள் இயக்கத்தில் முக்கியத் தளபதிகளில் ஒருவராக
செயல்பட்டு வந்த பரிதி போரில் கால் ஒன்றை இழந்ததற்குப் பிறகு அந்த
இயக்கத்தில் இருந்து வெளியேறினார். 49 வயதான பரிதி மீது கடந்த ஆண்டும் ஒரு
முறை தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆனால், அதில் உயிர் தப்பிய அவர் மீது பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு
அலுவலகம் முன்னர் நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில்
சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பிரான்ஸ் போலிசார்
வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாவீரர் நாள் நெருங்கி
வரும் நிலையில், பரிதியை இலங்கையின் புலனாய்வு பிரிவினர்தான்
சுட்டுக்கொன்றுள்ளனர் என பிரான்ஸ் தமிழர் அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.