மானியத்தை பணமாக கொடுக்க பா.ஜ.க. எதிர்ப்பு

    அரசின் நலத்திட்டங்களுக்கான மானியத்தை வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக செலுத்தும் திட்டத்தை குஜராத்தில் நிறுத்தி வைக்க தேர்தல் ஆணையத்திடம் பாரதிய ஜனதா மனு கொடுத்துள்ளது.
மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்காக வழங்கப்படும் மானியம், இனி பொதுமக்களின் வங்கிக் கணக்கில் பணமாக நேரடியாக செலுத்தப்படும் என்ற மத்திய அரசின் முடிவு, தற்போது சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் குறிப்பாக, குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமையும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனால், அத்திட்டத்தை தற்போது அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திடம் பாரதிய ஜனதா கட்சி புகார் அளித்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி ஆகியோர் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திடம் இது தொடர்பான புகார் மனுவை இன்று அளித்தனர்.
முதல்கட்டமாக, இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ள 51 மாவட்டங்களில் 4 மாவட்டங்கள் குஜராத்தில் உள்ளதாகவும், இவ்வாறு நேரடியாக பணம் தருவது என்பது மக்களுக்கு லஞ்சம் கொடுப்பதைப் போன்றது என்றும் பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.