கர்நாடகாவின் முடிவுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம்

      காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடகா மறுத்ததற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காவிரி நதிநீர் பிரச்சனையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்டியிருக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி நதி நீர் பிரச்சனையில் இரு மாநில முதலமைச்சர்களும் என்ன பேசினார்கள் என்பதனை தெரிந்துக் கொண்ட பின்னர்தான்,அதுகுறித்து கருத்து சொல்ல முடியும் என்றார்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் கூறுகையில், கர்நாடக அரசின் இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், கர்நாடகத்தின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது என்றார். தமிழகத்தில் கருகும் நிலையில் உள்ள சம்பா பயிர்களுக்கு, மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுத்தியுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் இல.கணேசன், கர்நாடக அரசு மனிதாபிமான முறையில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடகாவின் இந்த முடிவு மிகவும் வேதனை அளிப்பதாகவும் இல.கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
காவிரி நீரை உடனடியாக வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைப்படி நடந்த இந்த சந்திப்பில், நிலைமையை நேரில் விளக்கியும் கர்நாடக அரசு பிடிவாதமாக தண்ணீர் தர மறுத்துள்ளது கடுமையான ஆட்சேபணைக்கு உரியது என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு நீதி வழங்க மத்திய அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
காஸ்டியும் சுரேஷ்