முதல்வரின் புதிய அறிவிப்புகள்: குண்டர் சட்டத்தில் இணையதள குற்றங்கள்

          சாலை மறியலுக்கு 30 நாட்களுக்கு முன்பே முன் அனுமதி பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 343 அறிவிப்புகளை முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார். குண்டர் சட்டத்தின் வரையறைக்குள் இணையதள குற்றங்கள் இணைக்கப்படும் என்றும் பொது அமைதியை குலைக்கும் எந்த ஒரு குற்றச் செயலில் ஈடுபட்டாலும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
மூன்று நாள் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் முடிவில் இந்த அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார். மேலும், குற்றத்தை தடுப்பதற்கும் கண்டுபிடிப்பதற்கும் காவல்துறைக்கும் சிறைத் துறைக்கும் இடையே ஒருங்கிணைப்பு அவசியம் என்று இந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தேடப்படும் குற்றவாளிகளின் ஒளிப்படங்களை சிறைக் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பும்படி, மாநாட்டில் அறிவுறுத்தப்பட்டது. மேலும், சிறைத் துறை கண்காணிப்பாளர்களுக்கும், காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும் இடையேயான கூட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குற்றச்செயலில் ஈடுபடுவோர் சிறைகளை புகலிடமாக பயன்படுத்துவது சமீபகாலமாக அதிகரித்திருப்பதால், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-பசுமை நாயகன்