மின் உற்பத்தி தமிழகமும்…குஜராத்தும்…


  தொழில்முனைவோருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கும் குஜராத்தில், புதிதாக தொழில் தொடங்க ஏராளமானோர் ஆர்வத்துடன் செல்கின்றனர். அம்மாநில அரசு தொழில்முனைவோருக்கு அளிக்கும் முன்னுரிமையும், தடையற்ற மின்சார வசதியுமே இதற்கு காரணம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் கடுமையான மின் பற்றாக்குறை இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை மாறி  , மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக குஜராத் மாறியுள்ளது.
தமிழகத்தில் தற்போது நிலவும் மின்தடை சூழலுக்கு இணையான நிலைதான் குஜராத்திலும் 10 ஆண்டுகளுக்கு முன்பு நிலவியது. வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடியாத நிலை இருந்தது. தொழிற்சாலைகள் மின் பற்றாக்குறையால் முடங்கத் தொடங்கின.  பொருளாதார முடக்கம் மற்றும் மின்பற்றாக்குறை என்று இரு தலைக் கொள்ளி எறும்பாக தவித்த குஜராத்தை, தனது நிர்வாகத் திறமையின் மூலம், இன்றைக்கு நாட்டின் முன்னோடி மாநிலமாக முதலமைச்சர் நரேந்திர மோதி மாற்றிக் காட்டியுள்ளார். மின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமே பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்த முடியும் என மோதி நம்பியதால், மின்சாரத்துறைக்கு முழு முதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டதாக குஜராத் எரிசக்தி துறையின் முதன்மைச் செயலாளர் பாண்டியன் தெரிவித்தார்.
மின் வினியோகத்திற்கு பெரும் சவாலாக இருப்பது வினியோக இழப்புதான். இதை கட்டுப்படுத்துவதிலும் குஜராத் மின்சார வாரியம் வெற்றி பெற்றுள்ளது.
குஜராத்தில் பாயும் ஆறுகளில் ஒன்றான நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் மிகப்பெரிய நீர் மின் உற்பத்தி நிலையமும் செயல்படுகிறது. இதில் கிடைக்கும் மின்சாரம், குஜராத் மாநிலத்தின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க அளவு பங்களிக்கிறது.
குஜராத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் விவசாயத்திற்கு பெரும்பங்கு உண்டு என்பதை மோதி தலைமையிலான அரசு உணர்ந்துள்ளது. இதன் காரணமாகவே, விவசாயிகளுக்கு தடையற்ற மின்சாரத்தை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
மின் உற்பத்தியை அதிகரித்ததன் மூலம் 10 ஆண்டுகளில் பாராட்டத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ள குஜராத், மின் பற்றாக்குறையால் தவிக்கும் தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறது. இதுமட்டுமின்றி, தேவைக்கு அதிகமாக உற்பத்தியாகும் மின்சாரத்தை இந்தியாவின் 12 மாநிலங்களுக்கு குஜராத் விற்பனை செய்கிறது. இதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு தனது பொருளாதாரத்தையும் குஜராத் அரசு மேம்படுத்தி வருகிறது.
இந்தியாவின் மின் உற்பத்தி நிறுவு திறனில் 2 வது இடத்தில் குஜராத்தும் 3ம் இடத்தில் தமிழகமும் உள்ளன. ஆனால் தங்களது தேவைக்கு போக பல மாநிலங்களுக்கு மின்விநியோகம் செய்கிறது குஜராத். தமிழகத்திலோ சில மணி  நேரம் தான் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.
தமிழக மின்வாரியம், டிஎன்இபி, டான்ஜெட்கோ, டான் டிரான்ஸ்கோ என மூன்று பிரிவுகளாகச் செயல்படுகிறது. இவற்றை வழக்கமாக கண்காணிக்கும் அதிகாரிகள் தவிர்த்து, ஐஏஎஸ் அந்தஸ்தில் ஒரே ஒருவர் மட்டுமே கவனித்து வருகிறார். ஆனால் குஜராத்தில் மின்வாரியத்தின் செயல்பாடு வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளது. குஜராத் மின்வாரியம், குஜராத் உர்ஜா, விகாஸ், நிகாம் லிட் என மூன்று  நிறுவனங்கள், உற்பத்தி மற்றும் நிர்வாகத்தை கவனிக்கவும், ஜெட்கோ, டிஜிவிசிஎல், பிஜிவிசிஎல் என நான்கு மின்பகிர்மான நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதை கண்காணிக்க மொத்தம் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மின்வினியோகம் செய்யும் பணியை அரசு மட்டுமே மேற்கொள்கிறது. ஆனால், குஜராத்தில், டோரன்ட் என்ற தனியார் நிறுவனமும் மின்வினியோகம் செய்கிறது. மத்திய தொகுப்பையும் சேர்த்து தமிழகத்தின் மொத்த மின் நிறுவு திறன், 17 ஆயிரத்து 500 மெகாவாட் ஆகும். அனல், புனல் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலமாக  8 ஆயிரம் மெகாவாட்டுக்கும் குறைவாகவே மின்சாரம் கிடைக்கிறது. காற்றாலை மூலம், காற்றுவீசும் காலத்தில் மட்டும் 7,200 மெகாவாட் கிடைக்கிறது. ஆனால், குஜராத்தைப் பொறுத்த வரை கடந்த அக்டோபர் மாதக் கணக்குப்படி அதன் நிறுவுத்திறன் 23 ஆயிரம் மெகாவாட். இதில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுடன் சேர்த்து 12 ஆயிரம் மெகாவாட்டும், காற்றாலை மூலம் 4 ஆயிரம் மெகாவாட்டும், சூரிய சக்தி மூலம் 1000 மெகாவாட்டும் கிடைக்கிறது. தமிழகத்தில் வீட்டு உபயோக மின்சாரத்தின் அளவு கடந்த ஆண்டு மட்டும் 17 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் குஜராத்தில் இதற்கு நேரெதிராக, கடந்த ஆண்டை விட மின் உபயோக அளவு 5 சதவீதம் குறைந்துள்ளது.
தமிழகத்தில் 2003ம் ஆண்டு மின் கட்டணம் 9 சதவிகிதம் உயர்த்தப்பட்டது. 2010 ஆம் ஆண்டு 9 சதவிகிதம் உயர்த்தப்பட்டது. 2012 ஆம் ஆண்டு 37 சதவிகிதம் உயர்த்தப்பட்டது. ஆனால், குஜராத்தில் கடந்த பத்து ஆண்டாக தொடர்ந்து ஆண்டு ஒன்றுக்கு யூனிட்டுக்கு 10 பைசா முதல் 50 பைசா வரை உயர்த்தப்பட்டது. தமிழ்நாட்டில் வீடுகளுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.1.10 வசூலிக்கப்படுகிறது. ஆனால் குஜராத்தில் யூனிட்டுக்கு ரூ. 3. 50 வசூலிக்கப்படுகிறது.
மின் உற்பத்தி வளர்ச்சியை எடுத்துக் கொண்டால், குஜராத்தில் கடந்த 2009ல் இருந்து 2010ம் ஆண்டுக்குள் 18.8 சதவிகிதமாகவும், 2010 முதல் 2011 வரை 12 சதவிகிதமாகவும், 2011ல் இருந்து 2012 வரை 13 சதவிகிதமாகவும் உள்ளது. இது 2013 க்குள் 27 சதவிகிதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில், கடந்த பிப்ரவரி 24,1996ல் வடசென்னை 3வது மின் நிலையம் அமைக்கப்பட்டதற்கு பிறகு 3 சிறிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டது தவிர வேறு எந்த வளர்ச்சியும் இல்லை. 2012-13ம் ஆண்டில் கூடங்குளம் அணு மின் நிலையத்தையும் சேர்த்து 4,325 மெகா வாட் மின் உற்பத்தி அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.