அரசுக்கு 90 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி ஆதாயம் அடைந்த சுரேஷ் கல்மதி

  காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் தொடர்பாக சுரேஷ் கல்மதி மீது பிப்ரவரி 4ஆம் தேதி குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் என டெல்லி சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வழக்கை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள புதிய நீதிபதி ரவீந்தர் கார், வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ய நேரம் தேவைப்படுவதாக விளக்கமளித்துள்ளார்.
ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஒருங்கிணைப்பாளரான சுரேஷ் கல்மதி மீது இன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.
குறிப்பாக ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழும் மோசடி, சதித்திட்டம், ஏமாற்றுதல், தடயத்தை அழித்தல் என பல்வேறு பிரிவுகளில் குற்றப்பதிவு செய்யப்படும் என கூறியிருந்தார்.
ஆனால் இந்த முடிவு தற்போது அடுத்த மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடத்தியதில் அரசுக்கு 90 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி ஆதாயம் அடைந்ததாக சுரேஷ் கல்மதி, ஒருங்கிணைப்புக் குழு செயலாளர் லலித் பெனாட் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, 10 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.