உயர் மட்டக் குழு அமைத்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்

         தமிழகத்தில் விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நிவாரணம் குறித்து ஆராய, உயர் மட்டக் குழு அமைத்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.அந்த குழுவுக்கு மாநில நிதி அமைச்சர் தலைமை வகிப்பார் என்று தமிழக அரசு இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்தக் குழு வறட்சி நிலைமை மற்றும் பயிரிழப்பு குறித்து ஆய்வு செய்து எந்தெந்த வட்டங்கள்,ஒன்றியங்கள் வறட்சிப் பகுதிகளாக அறிவிக்கப்பட வேண்டும் என்று மாநில அரசுக்கு பரிந்துரை செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு தக்க நிவாரணம் உரிய நேரத்தில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் எந்தவித பாதிப்புக்கும் உள்ளாகாத வகையில் நியாயமான முறையில் நிவாரணம் வழங்குவதை அரசு உறுதி செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
உயர் மட்டக் குழுவில், வேளாண்மை, மின்சாரம், கூட்டுறவு உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்களை உறுப்பினர்களாகவும்,நிவாரண ஆணையர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் உறுப்பினர் செயலாளராகவும் இருப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.