காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை, பிப்ரவரி 20ம் தேதிக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும்


        காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதற்கான கோப்புகளில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் கையெழுத்திட்டு விட்டதால், இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவது குறித்து சட்ட அமைச்சகத்துடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியது.
   நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடும் விவகாரத்தை சட்டரீதியாக மட்டுமே அணுகுவது என்று மத்திய அரசு முடிவு செய்ததைத் தொடர்ந்து, அதனடிப்படையில் பணிகள் நடைபெற்றது.
   காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை, பிப்ரவரி 20ம் தேதிக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே கெடு விதித்திருந்த நிலையில், இன்று அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
     அரசிதழில் வெளியானால் ஏற்படும் பயன்கள் என்ன?
  • காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளியானால், அது தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் பலனளிக்கும்.

  • நடுவர் மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளியாவதன் மூலம் காவிரி நதிநீர்ப் பங்கீடு, இனி காவிரி மேலாண்மை வாரியத்தின் மூலமே மேற்கொள்ளப்படும்.

  • இறுதித் தீர்ப்பின்படி சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இந்த அமைப்பே நீரை பங்கிட்டு வழங்கும்.

  • இடைக்காலத் தீர்ப்பின்படி, 11 லட்சம் ஹெக்டேர் விளைநிலத்தின் பாசனத்திற்காக காவிரி தண்ணீரை பயன்படுத்தி வந்த கர்நாடகாவுக்கு, இறுதித் தீர்ப்பின்படி 19 லட்சம் ஹெக்டேருக்கு தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

  • காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான முக்கிய முடிவுகளை மேலாண்மை வாரியமே எடுக்கும் என்பதால், தமிழகத்தைப் பொறுத்த வரை, காவிரி நதிநீரைப் பெறுவதற்காக இனி நீதிமன்றங்களை நாட வேண்டிய அவசியம் இருக்காது.

மத்திய நீர்வளத்துறை அதிகாரியின் தலைமையில், தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் காவிரி மேலாண்மை வாரியத்தில் இடம்பெற்றுள்ளனர்.


************************************************************************************************