அப்சல் குரு இன்று தூக்கிலிடப்பட்டார்.


  நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் கைதான அப்சல் குரு இன்று தூக்கிலிடப்பட்டார். இன்று காலை 8.00 மணிக்கு அவருக்கு டெல்லியில் உள்ள திஹார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து அப்சல்குரு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளன.
அப்சல் குரு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது, காலம் கடந்தது என்றாலும் மத்திய அரசின் நடவடிக்கை வரவேற்கதக்கது என பாரதிய ஜனதா கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் நீதிமன்றம் குற்றமற்றவர்களை விடுவித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியது. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி கருணை மனுக்கள் பெறப்பட்டன. இறுதியில் கருணை மனு மீதான முடிவு எடுக்கும் உரிமை அரசிடம் வந்தது. தற்போது நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சட்டப்படி அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.
சட்டப்படி தண்டனை நிறைவேற்றம்: ஞானதேசிகன்: நாடாளுமன்ற தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளி அப்சல் குருவுக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படியே தூக்கு தண்டனை நிறைவேற்றப் பட்டிருக்கிறது என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் ஞான தேசிகன் தெரிவித்துள்ளார்.
அரசியல் உள்நோக்கம் உள்ளது: பழநெடுமாறன் -அப்சல் குரு தூக்கில் இடப்பட்டதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருப்பதாகவும், அவசரத்துடன் நிறைவேற்றப்பட்ட இந்த தூக்கு தண்டனைக்கு தாம் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தமிழ் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
கண்டிக்கத்தக்க நடவடிக்கை: அப்சல் குருவுக்கு சட்டப்படி வழங்கப்பட்டிருக்க வேண்டிய வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, தூக்கிலிடப்பட்டிருப்பதாக மனித நேய மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. தூக்கு தண்டனையே கூடாது என்பது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இச்சம்பவம் நடந்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அக்கட்சி கூறியுள்ளது.
வரவேற்கத்தக்கத் தீர்ப்பு: அப்சல் குருவுக்கு வழங்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை வரவேற்பதாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த திட்டமிடும் அந்நிய சக்திகளுக்கு துணைபோகுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு இதுதான் நேரும் என்ற செய்தி இதன் மூலம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
ஜனநாயகப் படுகொலை: அப்சல் குருவின் தூக்கு தண்டனை அறிவிப்பு ஏதும் இன்றி நிறைவேற்றப் பட்டிருப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
மறக்க முடியாத அந்த நாள்: 13 டிசம்பர் 2001-ல் நடந்தது என்ன?
அப்சல் குருவுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற காரணம், 2001 டிசம்பர் 13 ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத்தின் மீது நடந்த தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவம்தான்.அந்த நாளில் என்ன நடந்தது என்று இப்போது பார்க்கலாம்.

2001 டிசம்பர் 13 ஆம் தேதி உள்துறை அமைச்சகம், நாடாளுமன்றம் என்ற அடையாளங்கள் தாங்கிய காரில் 5 தீவிரவாதிகள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தனர். அந்த நேரத்தில் மாநிலங்களவையும், மக்களவையும், 40 நிமிட நேரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், அப்போதைய எதிர்க்கட்சித்தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறியிருந்தனர். அப்போதைய துணை குடியரசுத் தலைவர் கிருஷ்ணகாந்த் காரின் மீது மோதிய தீவிரவாதிகள், உடனடியாக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
இதையடுத்து துணைக் குடியரசுத்தலைவரின் பாதுகாவலர்கள், பாதுகாப்புப்படை அதிகாரிகள் பதிலுக்கு தாக்குதல் நடத்தினர். இதனால் நாடாளுமன்றம் முழுவதும் துப்பாக்கிச்சூட்டால் அதிர்ந்தது. இதேநேரத்தில நாடாளுமன்ற வளாகத்தின் நுழைவாயில்கள் மூடப்பட்டன.
வெடிகுண்டுகளை உடலில் பொருத்திவந்த ஒரு தீவிரவாதியை சுட்டபோது வெடித்துச்சிதறியதால் அங்கு பதற்றம் கூடியது.. தாக்குதலில் ஈடுபட்ட 5 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 5 காவல்துறையினர்,நாடாளுமன்ற காவல்பணியில் ஈடுபட்ட மத்திய பாதுகாப்புப் படை பெண் அதிகாரி ஒருவர், காவலாளிகள் இருவர் தோட்டப் பராமரிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
படுகாயமடைந்த 18 பேரில் பத்திரிகையாளர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பின்னர் உயிரிழந்தார்.
கிட்டதட்ட அரைமணிநேரம் இந்த தாக்குதல் சம்பவம் நீடித்தது. நாடாளுமன்றம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் அமைச்சர்கள், எம்.பிக்கள் இருந்தபோதும், யாரும் காயமின்றி உயிர்தப்பினர்.
தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் டெல்லியில் பேருந்து ஒன்றில் இருந்த அப்சல் குரு உடனடியாக கைது செய்யப்பட்டார்.
பதக்கங்களைப் பெற்றுக் கொள்வோம்: நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய முக்கிய குற்றவாளிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதையடுத்து, மத்திய அரசு அளித்த பதக்கங்களை தற்போது மனப்பூர்வமாக பெற்றுக்கொள்ளத் தயாராக இருப்பபதாக நாடாளுமன்றத் தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு வீரர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக அப்சல் குருவுக்கு நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை நிறைவேற்ற காலம் தாழ்த்தப் பட்டதால் மத்திய அரசு அளித்த வீரப்பதக்கங்களை வாங்க அவர்கள் மறுத்து வந்தனர். 11 ஆண்டுகள் கடந்தேனும் குற்றவாளிக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதில் தங்களுக்கு ஆறுதல் அளிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்
                                                 -இணைய செய்தியாளர் - s.குருஜி