பாபர் மசூதி வழக்கில் சிபிஐக்கு உச்சநீதிமன்றம் கேள்வி


பாபர் மசூதி இடிப்பு வழக்கில், காலதாமதமாக மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தது குறித்து சிபிஐக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
    பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில், பாரதிய ஜனதா, விஸ்வ ஹிந்து பரிஷத் ஆகியவற்றின் தலைவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில், மசூதியை இடிக்கத் தூண்டியதாகவும், சதி செய்ததாகவும், எல்.கே.அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
  இதை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் அளித்த தீர்ப்பில், சதி செய்தல் என்ற குற்றச்சாட்டில் இருந்து அத்வானி உள்ளிட்ட தலைவர்களை விடுவித்ததோடு, மற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளை, ரே பரேலி நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரிக்கவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் 90 நாட்களுக்குள் சிபிஐ மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். ஆனால், ஆறு மாதங்களுக்கு பின், சிபிஐ மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்த போது, எதற்காக இவ்வளவு தாமதமாக மேல்முறையீடு செய்யப்பட்டது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
    இதற்கு பதிலளித்த சிபிஐ வழக்கறிஞர் பி.பி.ராவ், பல ஆவணங்களை ஹிந்தியில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்க வேண்டியிருந்ததால் தாமதம் ஏற்பட்டதாக குறிப்பிட்டார். ஆனால், அத்வானி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், அரசியல் நோக்கத்துக்காக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதையடுத்து, அயோத்தியில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், அங்குள்ள 67 ஏக்கர் நிலத்தில் எவ்வித கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என்றும், பழுதடைந்துள்ள தார்ப்பாய், கயிறு போன்றவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர். மேலும், அத்வானி உள்ளிட்ட தலைவர்களுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்பது குறித்து, பிப்ரவரி 18ம் தேதி மீண்டும் விசாரணை நடைபெறும் என்று கூறி, வழக்கை ஒத்திவைத்தனர்.
                             -இணைய செய்தியாளர் - s.குருஜி