தலைவர் பதவியில் இருந்து நிதின் கட்கரி ராஜினாமா செய்யத் தேவையில்லை
என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு
எடுக்கப்பட்டுள்ளது. நாக்பூரில் இருந்து நேற்று மாலை டெல்லி வந்த நிதின்
கட்கரி, பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானியுடன் தனியாக ஒரு மணி நேரம்
ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து, கட்கரி பதவி விலகப் போவதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், கட்சியின் மூத்த தலைவர்களான சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி,
விஜய் காயல் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. பின்னர்
செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர்,
எந்த விசாரணைக்கும் தயாராக இருப்பதாக நிதின் கட்கரி தெரிவித்திருப்பதால்,
கட்சி அவருக்கு பக்கபலமாக இருப்பது என ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக
தெரிவித்தார்.
மேலும், கட்கரி ராஜினாமா செய்யப் போவதாக வந்த தகவல்கள் அடிப்படையற்றவை
என்றும் அவர் கூறினார். இதையடுத்து தனது வழக்கமான பணிகளை கட்கரி தொடர
உள்ளார். ஹிமாச்சலப்பிரதேச தேர்தல் பிரசாரத்தில் கட்கரி இன்று கலந்து
கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.