தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. தலைமைச்செயலர்
சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 4,000 மெ.வாட் மின்பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் கடுமயைான மின் வெட்டு நிலவி வருகிறது.
முன்னதாக,மக்களை வாட்டும் இந்த மின் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய
தொகுப்பில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வழங்க தமிழக அரசு கோரிக்கை
வைத்தது. ஆனால் தமிழக அரசுக்கு 100 மெகாவாட் மின்சாரம் மட்டுமே மத்திய அரசு
வழங்கியது. அதிலும் மின்வழித் தடம் சரியாக இல்லாததால் தமிழக அரசுக்கு 78
மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைத்தது.
தொடர்ந்து மின்பற்றாக்குறை குறித்து பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் பலமுறை கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற தமிழக அமைச்சவைக் கூட்டத்தில்,
தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டிய பொறுப்பும் கடமமையும்
மத்திய அரசுக்கு இருக்கிறது எனவே கூடுதல் மின்சாரம் வழங்க மத்திய அரசுக்கு
உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது என தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் இன்று உச்சநீதிமன்றத்தில் மனு
தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்திய மின்சார சட்டம் பிரிவு (37/38) கீழ் இந்த மனு தாக்கல்
செய்யப்பட்டது. உபரி மின்சாரம் இருக்கும் ஒரு மாநிலம் மின் பற்றாக்குறையில்
தவிக்கும் மாநிலத்திற்கு மின்சாரம் வழங்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
இதன்படி மத்திய அரசு தமிழகத்திற்கு மின்சாரம் வழங்க வேண்டும் என
கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.டெல்லி அரசு உபரியாக இருக்கும் 1721
மெகாவாட் மின்சாரத்தை மத்திய தொகுப்பிற்கு வழங்குகிறது. இந்த மின்சாரத்தை
தமிழகத்தை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தமிழக அரசின்
மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.