தமிழக அரசு தீபாவளி போனஸ் அறிவிப்பு

     தமிழ்நாடு போக்குவரத்து , மின்சாரம்  உள்ளிட்ட துறைகளின் ஊழியர்களுக்கு 20 சதவிகித போனஸ் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2011-12 ஆம் நிதி ஆண்டிற்கு தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களைச் சார்ந்த ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 102 தொழிலாளர்களுக்கு 8 புள்ளி 33 விழுக்காடு போனஸ் மற்றும் 11 புள்ளி 67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் வழங்க ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். 11 ஆயிரத்து 452 பதிலிப் பணியாளர்களுக்கு 8 புள்ளி 33 விழுக்காடு போனஸ் வழங்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தைச் சேர்ந்த 74 ஆயிரத்து 950 தொழிலாளர்களுக்கு 8 புள்ளி 33 விழுக்காடு போனஸ் மற்றும் 11 புள்ளி 67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் தொகை வழங்க ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
இதேபோன்று, மின்வாரியத்தில் பணிபுரியும் 9 ஆயிரத்து 350 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 500 ரூபாய் போனஸ் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல், தமிழ்நாடு தேயிலை தோட்டம், ரப்பர் தோட்டம், வனத்தோட்ட கழக ஊழியர்களுக்கும் , பாடநூல், டாஸ்மாக் , கூட்டுறவு மற்றும் சர்க்கரை ஆலைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு 20 சதவிகித போனஸ் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

-பசுமை நாயகன்