ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்காக புதிய குழு ஒன்றை ஏற்படுத்தப் போவதாக
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அறிவித்துள்ளார். கோவா தலைநகர் பனாஜியில் பேசிய
அவர், டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் 17 அல்லது 18 பேரை சமூக ஆர்வலர்
குழுவின் நிர்வாகிகளாக தேர்வு செய்ய இருப்பதாக கூறினார்.
இதைத் தொடர்ந்து, வரும் 10ஆம் தேதி ஊழலுக்கு எதிரான போராட்டம்
மறுபடியும் தொடரும் என அன்னா ஹசாரே தெரிவித்தார். தனது அமைப்புக்கு புதிய
பெயர் சூட்டுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சமூக ஆர்வலர்
ஹசாரே தெரிவித்தார். சமூக ஆர்வலர் குழுவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ தளபதி
வி.கே.சிங் அரசியல் கட்சியில் சேருவது குறித்து கேட்டதற்கு, அவர் தம்மிடம்
அவ்வாறு கூறவில்லை என ஹசாரே விளக்கமளித்தார்.
ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற அமைப்பில் ஹசாரே தலைமையில் கிரண்பேடி,
அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலர் செயல்பட்டனர். ஆனால் கெஜ்ரிவால்
உள்ளிட்ட சிலர், அரசியல் கட்சி தொடங்க முடிவு செய்து குழுவில் இருந்து
பிரிந்துவிட்டனர்.