அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமிரா

            மிழகத்தின் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் கண்காணிப்பு  கேமிரா பொருத்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். பதிவுத் துறை அலுவலகங்களின் பணிகளை கணினிகள் மூலம் ஒருங்கிணைக்கவும், மேலாண்மை தகவல் பராமரி்க்கும் முறை மூலம் துறை பற்றிய அனைத்து விவரங்களையும் ஒருங்கிணைத்து பராமரிக்கவும் முதலமைச்சர் ஜெயலலிதா 117 கோடியே 34 லட்சம் ரூபாய் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.
இதுதவிர, சார் பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடுகள் ஏதும் நடக்காமல் கண்காணிக்க, ஒவ்வொரு அலுவலகத்திலும் இரண்டு கண்காணிப்பு கேமிராக்களை நிறுவ, முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அலுவலகங்களில் அன்றாடம் நடைபெறும் பத்திரப் பதிவு மற்றும் திருமணம் பதிவு செய்தல் போன்றவை பதிவு செய்யப்பட உள்ளது. சார் பதிவாளர் அலுவலகங்களை, பதிவுத் துறை தலைவர் தனது அலுவலகத்தில் இருந்தபடி, இணையதள இணைப்பு வழியாக கண்காணிக்க முடியும்.
இதற்காக முதலமைச்சர் ஜெயலலிதா 3 கோடியே 50 லட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறும் ஆவணப் பதிவு மற்றும் திருமணப் பதிவு போன்ற நிகழ்ச்சிகளை படம் பிடித்து, குறுந்தகட்டில் பதிவு செய்து, அவை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு 50 ரூபாய்க்கு வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
மேலும், வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் சார் பதிவாளர் அலுவலகங்கள் அனைத்திற்கும் ஐந்து ஆண்டுகளுக்குள் சொந்த கட்டடம் கட்டவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக நடப்பு ஆண்டில், 29 சார் பதிவாளர் அலுவலகங்களை உள்ளடக்கி 17 இடங்களில் ஒருங்கிணைந்த பதிவுத் துறை அலுவலக வளாகங்கள் அமைக்கவும், 48 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டடம் கட்டவும் 48 கோடியே 90 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-பசுமை நாயகன்