மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் காட்டு யானைகள்

            மிழகத்தில் அதிக அளவு யானைகள் நடமாட்டம் உள்ள இடங்களில் ஒன்று கோவை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி.
காலப்போக்கில் யானைகளின் வழித் தடங்களில் கல்வி நிறுவனங்களும், ஆசிரமங்களும் கட்டப்பட்டதால், அவை தங்கள் பயணப் பாதையை மாற்றிக்கொண்டதாக மலைகிராம மக்கள் கூறுகின்றனர். யானைகள் பாரம்பரியமாய் பயன்படுத்திய பாதைகளில் அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதில், சிக்கல்கள் உள்ளதாக கூறுகின்றனர் வனத்துறையினர்.
வேறு வழியின்றி மலைகிராங்களுக்குள் வரும் காட்டு யானைகள் கண்ணில் படுபவர்களையெல்லாம் தாக்குவதாக கூறுகின்றனர் பாதிப்புக்குள்ளாகும் மக்கள். கோவை, பெரியநாயக்கன் வனச் சரகங்களில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும், யானை தாக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் காட்டு யானைகள் புகுவதும், பிறகு வனத்துறையினர் அவற்றை விரட்டுவதும் வாடிக்கையான நிகழ்வாக இங்கு மாறி உள்ளது. இனியும் தாமதிக்காமல் இந்த பிரச்னைக்கு அரசு நிர்வாகம் விரைவான தீர்வினை காண வேண்டும் என்கின்றனர் மலைவாழ் கிராம மக்கள்.
மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் யானைகள் வருவதை தடுப்பதற்காக, யானைகள் தடுப்பு அகழித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக வனத்துறையினர் கூறுகின்றனர்.
நிரந்தர தீர்வு எப்போது? மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் யானைகள் வருவதற்கு, வனங்கள் நாளுக்கு நாள் அழிக்கப்பட்டு வருவதும், ஒரு காரணமாக கருதப்படுகிறது. இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால், விலை மதிப்பதற்ற மனித உயிர்கள் பலியாவதை யாரும் தடுக்க இயலாது.
-பசுமை நாயகன்