ஜெனீவா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் இன்று தாக்கல்: இந்தியா தொடர்ந்து மவுனம்



இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் நடந்த இறுதிக் கட்ட போரின்போது பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
 
போர் அல்லாத பகுதி என்று அறிவிக்கப்பட்ட இடத்தில் தஞ்சம் புகுந்த தமிழர்களை நயவஞ்சகத்துடன் குண்டுகளை வீசி சிங்கள ராணுவம் கொன்றது. இதுபோல் பல போர்க்குற்ற மீறல்களை சிங்கள ராணுவம் நடத்தியது.
 
இதையடுத்து இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவித்து தண்டிக்க வேண்டும் என்று அனைத்து தமிழர் அமைப்புகளும், தமிழக அரசியல் கட்சிகளும் ஒட்டுமொத்த குரலில் வலியுறுத்தி வருகிறார்கள். போர்க்குற்ற மீறல்களுக்கு ஆதாரமாக லண்டனைச் சேர்ந்த சேனல் 4 தொலைக் காட்சியானது அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட காட்சிகளை வெளியிட்டது.
 
இதையடுத்து ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா போர்க்குற்ற தீர்மானம் கொண்டு வந்தது. தமிழக கட்சிகளின் நெருக்கடி காரணமாக இந்த தீர்மானத்தை இந்தியா கடைசி நேரத்தில் ஆதரித்தது.
 
இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் போர்க்குற்ற தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதற்காக ஜெனீவாவில் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கியது. இந்த கவுன்சிலில் 47 நாடுகள் உள்ளன. அந்த நாட்டுப் பிரதிநிதிகள் இலங்கை போர்க்குற்ற மீறல்கள் தொடர்பாக பேசி விவாதித்து வருகிறார்கள்.
 
அப்போது இலங்கையை பெரும்பாலான நாடுகள் கண்டித்துள்ளன. இதனால் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு ஆதரவு பெருகி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
இன்று ஜெனீவா மாநாட்டில் அமெரிக்காவின் தீர்மானம் தாக்கல் செய்யப்பட உள்ளது. கடந்த முறை போர்குற்ற தீர்மானத்தை அமெரிக்கா தாக்கல் செய்த போது கடைசி நேரத்தில் அதில் திருத்தங்கள் கொண்டு வந்ததால் அது இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
 
இந்த முறை அமெரிக்கா தாக்கல் செய்யும் தீர்மானம் தங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்த இலங்கை, அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தையில் இறங்கியது. இதற்காக இலங்கை அரசு ஒரு குழுவை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தது. இந்த குழுவினர் அமெரிக்க மனித உரிமை அதிகாரிகளை சந்தித்து பேசினார்கள்.
 
அப்போது தீர்மானத்தால் இலங்கைக்கு ஏற்படும் பாதகங்களை எடுத்துக் கூறி கெஞ்சினார்கள். இதைத் தொ டர்ந்து கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் திருத்தத்துடன் கூடிய தீர்மானத்தை அமெரிக்கா இன்று தாக்கல் செய்யும் என்று ஏசியன் டிரிபியுன் இணைய தளம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால் அமெரிக்கா தரப்பில் இது பற்றி எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
 
இந்த தீர்மானத்தில் இந்தியாவின் நிலை என்ன என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
 
கடந்த வாரம் இது தொடர்பாக டெல்லி மேல்- சபையில் தமிழக எம்.பி.க்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து காரசாரமாக பேசினார்கள்.
 
விவாதத்துக்கு பதில் அளித்த வெளியுறவு மந்திரி சல்மான் குர்ஷித், இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிட முடியாது என்று கூறிவிட்டார். இது தமிழர்களுக்கும், தமிழக அரசியல் கட்சிகளுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதையடுத்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க இன்று தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
 
இந்தியாவின் நிலை குறித்து மத்திய மந்திரி நாராயணசாமி கூறுகையில், இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசுக்கு மிகுந்த அக்கறை உள்ளது. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தின் முழு விவரமும் தெரியவில்லை. அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதே தெரியவில்லை. தீர்மான விவரம் கிடைத்ததும் இந்தியா தனது முடிவை அறிவிக்கும் என்றார்.